தஞ்சையில் இருந்து கிரு‌‌ஷ்ணகிரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


தஞ்சையில் இருந்து கிரு‌‌ஷ்ணகிரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 12 March 2020 5:00 AM IST (Updated: 12 March 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இருந்து கிரு‌‌ஷ்ணகிரிக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல், சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இப்படி அறுவடை செய்யப்பட்ட நெல், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் நிலையம் மூலம் பெறப்பட்டு பிள்ளையார்பட்டி, புனல்குளம், பருத்தியப்பர்கோவில், அம்மன்பேட்டை, வீரமரசன்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சேமிப்பு கிடங்குகளில் நெல் மூட்டைகளை அடுக்க இடம் இல்லாததால் திறந்தவெளியில் அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் அதிகஅளவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் அரவைக்காக பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டன.

2 ஆயிரம் டன் நெல்

பின்னர் லாரியில் இருந்த நெல்மூட்டைகளை சுமை தூக்கும் பணியாளர்கள் சரக்குரெயிலில் ஏற்றினர். மொத்தம் 40 வேகன்களில் 2 ஆயிரம் டன் நெல் ஏற்றப்பட்டது. பின்பு நெல் மூட்டைகள் ஏற்றப்பட்ட இந்த வேகன்கள் தஞ்சையில் இருந்து கிரு‌‌ஷ்ணகிரிக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கூறும்போது, பிற மாவட்டங்களிலும் நெல் விளைச்சல் நன்றாக இருப்பதால் அந்தந்த மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல், ஆலைகளுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இதனால் தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை கொண்டு சென்றால் அங்கே இடம் இல்லை என கூறுவிடுகின்றனர். இதன்காரணமாக 15 நாட்களாக நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் தான் அதிகஅளவில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. எந்த மாவட்டத்தில் ஆலைகளில் அரவைக்காக குறைவான அளவு நெல் மூட்டைகள் இருக்கிறது என்பதை அறிந்து அந்த மாவட்டத்திற்கு நெல் மூட்டைகளை அனுப்பி வைக்கிறோம் என்றனர்.

Next Story