ரெயில் நிலையங்களில் மலிவு விலையில் விற்கப்படும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை எக்ஸ்பிரஸ், விரைவு ரெயில்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்
தமிழகத்தில் ரெயில் நிலையங்களில் மலிவு விலையில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் என்று ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அரக்கோணம்,
தென்னக ரெயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் 100-க்கணக்கான ரெயில் நிலையங்கள் உள்ளன. தினமும் இந்த ரெயில் நிலையம் வழியாக மின்சார ரெயில், பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில், அதிவிரைவு ரெயில்கள் சென்று வருகிறது.
பொதுமக்கள் பஸ் போக்குவரத்தைவிட ரெயில் போக்குவரத்தை அதிகம் தேர்வு செய்து பயணம் செய்து வருவதால் ரெயில்களில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதை கருத்தில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ரெயில் நிலையத்தில் இலவச வை-பை வசதி, நகரும் படிக்கட்டுகள், லிப்ட், நவீன கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்து வருகிறது. ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் குடிநீரை சுத்திகரித்து மலிவு விலையில் வழங்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் பெரிய ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் ரெயில்வே நிர்வாகம் ‘ஜீரோ பி’ என்ற பெயரில் ஸ்டால் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்டால்களில் 300 மில்லி லிட்டர் 3 ரூபாய்க்கும், ½ லிட்டர் 5 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் 8 ரூபாய்க்கும், 2 லிட்டர் 12 ரூபாய்க்கும், 5 லிட்டர் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பயணிகள் காலி குடிநீர் பாட்டில்கள் கொண்டு சென்று குடிநீர் வாங்கினால் 300 மில்லி லிட்டர் 2 ரூபாய்க்கும், ½ லிட்டர் 3 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் 5 ரூபாய்க்கும், 2 லிட்டர் 8 ரூபாய்க்கும், 5 லிட்டர் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீருக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் ரெயில்வே நிர்வாகம் பெரிய ரெயில் நிலையங்களில் கூடுதல் கவுண்ட்டர்களை திறந்து விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் குடிநீர் ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், அதிவிரைவு ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பிளாட்பாரங்களில் ரெயில்கள் நிற்கும் போது ரெயிலில் இருந்து இறங்கி குடிநீர் ஸ்டாலுக்கு சென்று குடிநீர் வாங்கிக்கொண்டு அவசர அவசரமாக செல்கின்றனர். சில நேரங்களில் பயணிகள் குடிநீர் வாங்கி கொண்டிருக்கும் போது ரெயில்கள் புறப்பட்டு செல்வதால் ரெயிலை தவறவிடும் நிலை இருந்து வருகிறது. சில நேரங்களில் பயணிகள் கீழே விழுந்து காயங்களுடன் ரெயிலை பிடித்து செல்கின்றனர்.
இதுகுறித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் கூறியதாவது:-
அரக்கோணம் ரெயில் நிலையம் 8 பிளாட்பாரங்கள் கொண்ட பெரிய ரெயில் நிலையம் ஆகும். இந்த வழியாக தினமும் 100-க்கணக்கான ரெயில்கள் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு சென்று வருகிறது. அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கல்வி, வேலை சம்பந்தமாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரெயில் நிலையங்களில் நிற்கும் போது மலிவு விலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். அதே வேளையில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி பயணம் செய்யும் போது ஒரு லிட்டர் குடிநீரை 15 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.
பிளாட்பாரங்களில் மலிவு விலையில் விற்பது போல் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மலிவு விலை குடிநீர் விற்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் வேறு வழியில்லாமல் புலம்பி கொண்டே 15 ரூபாய் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆகவே ரெயில்வே நிர்வாகம் ரெயில் நிலையங்களில் ‘ஜீரோ பி’ மலிவு விலை குடிநீர் விற்பனை செய்யப்படுவது போல் தமிழகத்தில் உள்ள அனைத்து எக்ஸ்பிரஸ், அதிவிரைவு ரெயில்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தும் தனி பெட்டியில் ‘ஜீரோ பி’ மலிவு விலை குடிநீர் ஸ்டாலை பெட்டியில்ஓரமாக அமைத்து அதன் மூலம் ரெயில் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மலிவு விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ரெயில் பயணிகள் கூறினர்.
Related Tags :
Next Story