சிகரெட் பிடிக்க தீப்பெட்டி கேட்டபோது தகராறு தப்பி ஓடி ஏரியில் குதித்த வாலிபர் சாவு


சிகரெட் பிடிக்க தீப்பெட்டி கேட்டபோது தகராறு   தப்பி ஓடி ஏரியில் குதித்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 12 March 2020 3:15 AM IST (Updated: 12 March 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

சிகரெட் பிடிக்க தீப்பெட்டி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தப்பி ஓடி ஏரியில் குதித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சோழிங்கநல்லூர், 

துரைப்பாக்கம் கண்ணகிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (வயது 18). இவரும் இவரது நண்பர்கள் 11 பேரும், சக நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட 4 மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் சென்றனர். அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி விட்டு அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் செம்மஞ்சேரி ஓடை கரையில் அமர்ந்து அனைவரும் கஞ்சா புகைத்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு அருகில் கேளம்பாக்கம் அடுத்த படூர் பகுதியை சேர்ந்த 4 பேர் காரில் வந்து மது குடித்து கொண்டிருந்தனர்.

மது குடித்து கொண்டிருந்தவர்கள், கஞ்சா புகைத்து கொண்டிருந்த கண்ணகிநகர் பகுதியை சேர்ந்தவர்களிடம் சிகரெட் பிடிக்க தீப்பெட்டி கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைக்கலப்பானது. கண்ணகிநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததால் படூர் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவ இ்டத்திற்கு வரவழைத்தனர்.

கத்தி, உருட்டுக்கட்டையால் தாக்குதல்

படூரை சேர்ந்தவர்களும் கத்தி, உருட்டுக்கட்டையுடன் வந்தனர். கஞ்சா புகைத்து கொண்டிருந்தவர்களை படூரில் இருந்து வந்தவர்கள் சரமாரியாக தாக்கினர்.

ஒரு கட்டத்தில் கண்ணகிநகர் வாலிபர்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து கொள்ள ஓடினர். அதில் ஜான்பீட்டர் தன்னை காப்பாற்றிக்கொள்ள செம்மஞ்சேரி ஓடையில் குதித்தார்.

அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டதாக படூரில் இருந்து வந்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தனது நண்பர்களுடன் வெளியில் சென்ற ஜான்பீட்டர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் கண்ணகிநகர் போலீசில் புகார் செய்தனர்.

உடலை கைப்பற்றினர்

புகாரை பெற்றுக்கொண்ட கண்ணகிநகர் போலீசார் அவரது நண்பர்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜான்பீட்டர் உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் மாமல்லபுரம் சென்றது, இரவு செம்மஞ்சேரி ஓடையில் ஏற்பட்ட தகராறு குறித்து கூறியுள்ளனர்.

பின்னர் நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஓடையில் சந்தேகத்தின் பேரில் தேடிய போது ஜான்பீட்டர் உடல் கைப்பற்றப்பட்டது

சிகிச்சை

பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செம்மஞ்சேரி போலீஸ் எல்லையில் நடைபெற்றதால் இந்த வழக்கு செம்மஞ்சேரி போலீசுக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் ஜான்பீட்டரின் நண்பர் ஒருவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Next Story