கொலை, வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த வழக்குகளில் தலைமறைவு ரவுடி பரத்தின் கூட்டாளிகள் 6 பேர் கைது


கொலை, வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த வழக்குகளில் தலைமறைவு   ரவுடி பரத்தின் கூட்டாளிகள் 6 பேர் கைது
x
தினத்தந்தி 12 March 2020 4:28 AM IST (Updated: 12 March 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொலை, வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த வழக்குகளில் தலைமறைவாக இருந்த ரவுடி பரத்தின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் பிரபல ரவுடியாக இருந்த பரத், போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருந்தார். ஆனாலும் அவரது கூட்டாளிகள் பலர் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தார்கள். இந்த நிலையில், ரவுடி பரத்தின் கூட்டாளிகள் 6 பேரை ராஜகோபால்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் நெலகதரனஹள்ளியை சேர்ந்த சீனிவாஸ் (வயது 30), பிரவீன்(31), நாகசந்திராவை சேர்ந்த மரியப்பா(37), ஹெக்கனஹள்ளியை சேர்ந்த சோமு(27), நந்தீஸ்(30), ராஜகோபால்நகரை சேர்ந்த அனில்குமார் (36) என்று தெரிந்தது.

இவர்கள் 6 பேரும் ரவுடி பரத்துடன் சேர்ந்து கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.

10 வழக்குகளில் தீர்வு

மேலும் கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி ராஜகோபால்நகரில் வசிக்கும் சீனிவாஸ் என்பவரது வீட்டு முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை கைதான 6 பேரும் உடைத்திருந்தனர். மேலும் ஜனவரி 21-ந் தேதி பீனியா பகுதியில் நடந்து சென்றிருந்த கிரீஷ் என்பவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணத்தை 6 பேரும் கொள்ளையடித்து இருந்தனர். இந்த வழக்குகளில் போலீசாரிடம் சிக்காமல் 6 பேரும் தலைமறைவாக இருந்து வந்தது தெரிந்தது. கைதானவர்களில் சீனிவாஸ் மற்றும் அனில்குமார் ரவுடி ஆவார்கள்.

இவர்கள் 6 பேரையும் கைது செய்திருப்பதன் மூலம் ராஜகோபால்நகர், பீனியா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவர்கள் 6 பேர் மீதும் கோகா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ராஜகோபால்நகர் போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story