தியாகதுருகம் அருகே பரபரப்பு: தனியார் சர்க்கரை ஆலையை விவசாயிகள் முற்றுகை
தியாகதுருகம் அருகே நிலுவைத்தொகை கேட்டு தனியார் சர்க்கரை ஆலையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே கலையநல்லூரில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு கடந்த 2018-19-ம் ஆண்டு அரவை பணியின் போது அப்பகுதி விவசாயிகள் கரும்பு வழங்கினர். ஆனால் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் உரிய தொகையை வழங்காமல் ரூ.23 கோடி பாக்கி வைத்துள்ளனர். மேலும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலியையும் ஆலை நிர்வாகத்தினர் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஆலையின் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சாந்தமூர்த்தி தலைமையிலும், செயலாளர் ரகுராமன், பொருளாளர் ராஜகோபால், துணைத்தலைவர்கள் ஏழுமலை, மகேந்திரன், துணை செயலாளர்கள் குப்புசாமி, ஜெயமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் விவசாயிகள் சர்க்கரை ஆலை முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஆலை நிர்வாகத்தை கண்டித்து கையில் கரும்புகளுடன் கண்டன கோஷங்களை எழுப்பினர். இருப்பினும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆலை நிர்வாகத்தினர் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை ஆலை நிர்வாகத்திடம் இருந்து உடனே பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா, விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் ஆலை நிர்வாகிகளை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஆலை நிர்வாகிகள், விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை விரைவில் வழங்க ப்படும் என்று உறுதியளித்தனர். இதையறிந்த விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, மாநில செயலாளர் ஜோதிராமன், வட்ட செயலாளர் அருள்தாஸ், போளூர் தனியார் சர்க்கரை ஆலை சங்க செயலாளர் பாலமுருகன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க முன்னாள் வட்ட செயலாளர் மணி, வட்ட பொருளாளர் கொளஞ்சி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, தங்கராசு, சிங்காரவேல் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story