ராமநாதபுரம் அருகே மீனவர் எரித்துக்கொலை? குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் அருகே மீனவர் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் மகன் குமார்(வயது 45). மீனவரான இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இதுதொடர்பாக குமாரின் மாமா முத்துமுனியன் அளித்த புகாரின் அடிப்படையில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் ராமநாதபுரத்தை அடுத்துள்ள ஏந்தல் பகுதியில் சுடுகாட்டின் அருகே எரித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு தோண்டிப்பார்த்து அதில் இருந்த எலும்புகளை எடுத்து டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அருகில் உள்ள குளத்தில் குமாரின் மோட்டார் சைக்கிள் கிடந்துள்ளதை கண்டு அதனை கைப்பற்றி உள்ளனர். இந்த நிலையில் குமார் கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் திரண்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி ஆஸ்பத்திரி முன்புஉறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டது. போலீசார் விரைந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கோரி மறியலை கைவிட மறுத்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று புதிய பஸ் நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மாற்றுவழியில் பஸ்களை விடுவதில் சிக்கல் ஏற்பட்டு அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ் தலைமையிலான போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுகபுத்ரா அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முக்கிய பிரமுகர்கள் சிலர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை குறித்து தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி சாலை, புதிய பஸ் நிலைய பகுதி ஆகியவற்றில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story