ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ.2½ கோடி நிதியுதவி - கலெக்டர் தகவல்


ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ.2½ கோடி நிதியுதவி - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 March 2020 10:15 PM GMT (Updated: 12 March 2020 12:43 AM GMT)

மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மூலம் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பது தொடா்பாக முதலீட்டாளா்கள் மற்றும் ஜவுளித்தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ஜவுளித்தொழில் என்பது பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிலையான தொழிற்கூடமாகும். தற்போது ஜவுளித்தொழிற்கூடங்களை நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுத்திடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மானிய உதவியுடன் வழங்கி வருகின்றது.

அதன்அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக, ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருந்தால் போதும். மூன்று நபர்கள் சேர்ந்து இந்த திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். சிவகங்கை மாவட்டம் தொழில் மையங்களை உருவாக்க ஏதுவான மாவட்டமாகும். தொழில் தொடங்குவதற்கு தேவையான பயிற்சி மற்றும் வங்கிக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குனர் ராகவன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மடிசியா தொழில் கூட்டமைப்பு சங்க முன்னாள் தலைவர் ஞானசம்பந்தம், காரியாபட்டி ஜவுளிப்பூங்கா கூட்டமைப்பு சங்கத்தலைவர் இளங்கோ, கைத்தறி துறை கண்காணிப்பு அலுவலர்கள் பாண்டி, ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், சிறுதொழில் நிறுவன உரிமையாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Next Story