குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தி மக்கள் நல கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்குடி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் காரைக்குடியில், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், கிறிஸ்துவ தேவாலய பங்கு தந்தைகள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நல கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய இயக்கம் உருவாக்கியுள்ளனர்.
இந்த இயக்கம் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.
அதனையொட்டி முதல் கட்டமாக தேசிய குடியுரிமை பதிவேட்டிற்காக கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் எவ்வித தகவலையும் கூறக்கூடாது. அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமலும் இருக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் 2-ம் கட்டமாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி காரைக்குடி தாலுகா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க செயல்பாட்டாளர் சுந்தரவள்ளி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story