12 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் 18–ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது - கலெக்டர் கந்தசாமி
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 12 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் வருகிற 18–ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை துறையின் கீழ் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், சேத்துப்பட்டு, தேசூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, தூசி, வேட்டவலம் மற்றும் வாணாபுரம் ஆகிய 12 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தற்போது இயங்கி வருகிறது.
ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் பொதுவான தளமாக செயல்பட்டு, விவசாயிகளால் கொண்டு வரப்படும் விளைபொருட்கள் ரகசிய ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு, அதற்கான தொகைகள் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் அதிக மகசூல் காலங்களில் விவசாயிகள் விளைபொருட்களை உடனடியாக, அருகாமையிலேயே விற்பனை செய்வதற்கு ஏதுவாக 39 நேரடி கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தற்போது வேளாண் விளைபொருட்களின் விலை நிர்ணயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும், நேரடி கொள்முதல் நிலையத்திற்கும் வேறுபாடு உள்ளதாக விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
வேளாண் விளைபொருட்களின் விலை நிர்ணய வேறுபாட்டினை போக்கும் விதமாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 39 நேரடி கொள்முதல் நிலையங்களை தவிர்த்து திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், சேத்துப்பட்டு, தேசூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, தூசி, வேட்டவலம் மற்றும் வாணாபுரம் ஆகிய 12 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் வளாகத்திற்குள் தலா ஒரு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் வருகிற 18–ந் தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை இந்த நேரடி கொள்முதல் நிலையத்திலும் விற்பனை செய்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story