தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது


தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 13 March 2020 3:15 AM IST (Updated: 12 March 2020 6:46 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது;–

சிறப்பு முகாம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில், ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற குறைகள் முகாமிலேயே சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். இந்த முகாமில் பொது வினியோக திட்டம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

மேற்பார்வையாளர்கள் 

தூத்துக்குடி தாலுகாவிற்கு தூத்துக்குடி உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகாக்களுக்கு தூத்துக்குடி தனித்துணை ஆட்சியரும் (சமூகபாதுகாப்பு திட்டம்), திருச்செந்தூர் தாலுகாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகாவிற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும், கோவில்பட்டி தாலுகாவிற்கு கோவில்பட்டி உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், விளாத்திகுளம் தாலுகாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், எட்டயபுரம் தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளரும் (நிலம்) மற்றும் கயத்தாறு தாலுகாவிற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story