கல்பாக்கம் அருகே நடந்து வரும் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


கல்பாக்கம் அருகே நடந்து வரும் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 March 2020 10:15 PM GMT (Updated: 12 March 2020 5:34 PM GMT)

கல்பாக்கம் அருகே பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த இளையனார்குப்பம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் பக்கிங்காம் துணை கால்வாய் குறுக்கே செல்கிறது. இந்த கால்வாய் மீது 1974-ம் ஆண்டு் பெரிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. பழமையான இந்த பாலம் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த தொடர் மழையின் போது இந்த பாலத்தின் நடுப்பகுதி மற்றும் அடிப்புறத்தில் கீறல்கள் ஏற்பட்டு பெரும் சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் இந்த பாலத்தையொட்டி தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்து இடையூறு இல்லாத போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

பழுதடைந்த இந்த பாலம் தற்போது முற்றிலும் இடித்து அகற்றப்பட்டு அதே இடத்தில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த புதிய பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. விபத்தை குறைப்பதற்காக பாலத்தின் 2 புறமும் நடைபாதையும் அமைய உள்ளது. இந்த பணிகள் வரும் 2020 மார்ச் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. புதுப்பட்டினம் அடுத்த வாயலூர் கிராமத்தில் 1 கி.மீ நீளமுள்ள பாலாறு பெரிய பாலம் குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் 60 மீ நீளம், 21 மீ அகலம் கொண்ட இளையனார்குப்பம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையிலும் இன்னமும் முடிக்காமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story