தொண்டான்துளசி கிராமத்தில் வாழை தோட்டத்தை நாசம் செய்த காட்டு யானை கூட்டம்


தொண்டான்துளசி கிராமத்தில் வாழை தோட்டத்தை நாசம் செய்த காட்டு யானை கூட்டம்
x
தினத்தந்தி 13 March 2020 3:45 AM IST (Updated: 13 March 2020 4:52 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தில் காட்டு யானைகள் வாழைத்தோட்டத்தை நாசம் செய்தன.

காட்பாடி,

வேலூர்- ஆந்திர மாநில எல்லையையொட்டிய வனப்பகுதியில் வாழ்ந்த 14 காட்டு யானைகள் கூட்டம் சித்தப்பாறை வழியாக வேலூர் மாவட்ட எல்லைக்குள் கடந்த மாதம் 14-ந் தேதி புகுந்தன. இந்த காட்டு யானைகள் கூட்டத்தை வேலூர் மாவட்ட வனத்துறையினர் ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். சிலநாட்களிலேயே ஆந்திர மாநில வனத்துறையினர் அங்கு விரட்ட யானைகள் கூட்டம் மீண்டும் வேலூர் மாவட்ட எல்லையான காட்பாடி வனப்பகுதிக்குள் புகுந்தது.

தொண்டான்துளசி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் நெல் பயிர்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் பட்டாசு மற்றும் வெடிகளை வெடித்து யானைகளை விரட்டியடித்தனர். இதனால் யானைகள் அங்கிருந்து கிறிஸ்டியான்பேட்டை, டெல் வெடிமருந்து தொழிற்சாலை மலைப்பகுதியில் முகாமிட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு டெல் வெடிமருந்து தொழிற்சாலை மலைப்பகுதியில் இருந்த யானைகள் கூட்டம் தொண்டான்துளசி கிராமத்துக்குள் புகுந்தன. அங்கு கோவிந்தசாமி என்பவருடைய வாழை தோட்டத்துக்குள் புகுந்து நாசம் செய்தன. இதில் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

தகவல் அறிந்த வனத்துறையினர் பட்டாசு மற்றும் வெடிவெடித்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சத்தம்கேட்டு கிராம மக்களும் அங்கு திரண்டனர். அவர்களும் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை விரட்டினர். அப்போது யானைகள் பரதராமி, பூசாரிவலசை அருகே காட்டுப்பகுதிக்குள் சென்றன. இவை மோர்தானா அணை வழியாக குடியாத்தம் வனப்பகுதிக்கு சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த யானைகள் கூட்டத்தை கிருஷ்ணகிரி வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story