காட்பாடியில், காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 22 பேர் காயம்
காட்பாடியில் நடந்த காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 22 பேர் காயமடைந்தனர். சீறிப்பாய்ந்து ஓடிய காளையும் ரோட்டில் தவறிவிழுந்து காயமடைந்தது.
காட்பாடி,
காட்பாடி பொன்னியம்மன், கோட்டையம்மன் என்ற ரேணுகாம்பாள் திருவி்ழாவை முன்னிட்டு 73-வது ஆண்டு காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சாலையின் இருபுறங்களிலும் மூங்கில்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதிலும் இருந்து 86 காளைகள் கலந்துகொண்டன.
போட்டியை காட்பாடி தாசில்தார் பாலமுருகன், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக சீறிப்பாய்ந்தன. அதனை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். அப்போது மாடுகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டது. அதில் ஒருவருக்கு பலத்த அடிபட்டதால் அவர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
மேலும் சீறிப்பாய்ந்து ஓடும்போது கயிறு சிக்கி மாடு ஒன்றும் சாலையில் தவறிவிழுந்துவிட்டது. உடனே அங்கிருந்த கால்நடை மருத்துவர்கள், காயமடைந்த அந்த மாட்டுக்கு அங்கேயே சிகிச்சையளித்தனர்.
குறிப்பிட்ட தூரத்தை, குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு, அதன் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.65 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.55 ஆயிரம் உள்பட 45 பரிசுகள் வழங்கப்பட்டது.
சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் செந்தாமரை மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காட்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story