‘சிவசேனாவை புறந்தள்ளி தவறு செய்தோம்’ சுதீர் முங்கண்டிவார் ஒப்புதல்
சிவசேனாவை புறந்தள்ளி தவறு செய்தோம் என சட்டசபையில் பா.ஜனதா தலைவர் சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் இணைந்து எளிமையாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவி உள்பட ஆட்சியில் சிவசேனா சமபங்கு கோரியது. ஆனால் பாரதீய ஜனதா சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. இந்த போட்டியால் 30 ஆண்டுகால பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. இந்த கூட்டணி முறிவுக்கு இரு கட்சிகளும் ஒருவரை மற்றொருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சி கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைந்தது.
சுதீர் முங்கண்டிவார் பேச்சு
தற்போது 100 நாட்களை கடந்து இந்த கூட்டணி வெற்றிகரமாக சென்றுகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் நடப்பு பட்ஜெட் தொடர் கூட்டத்தில் பேசிய பா. ஜனதா தலைவர் சுதீர் முங்கண்டிவார், சிவசேனாவை, பாரதீய ஜனதா புறந்தள்ளிவிட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பட்ஜெட் தொடர்பான விவாதத்தின் போது பேசிய சுதீர் முங்கண்டிவார், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அமர்ந்திருந்த இருக்கையை பார்த்து, “முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உங்களுக்கு 3 மாதங்களாக தான் நண்பராக இருக்கிறார். எங்கள் நட்பு 30 ஆண்டுகள் நீண்டது” என்று தெரிவித்தார்.
இதற்கு அங்கிருந்த சிலர் நீங்கள் சிவசேனாவை புறந்தள்ளிவிட்டீர்கள் என குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த அவர், “ஆமாம் நாங்கள் சிவசேனாவை புறந்தள்ளினோம். ஆனால் எங்கள் தவறை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டாம். ஒரு நாள் நாங்கள் அதை சரிசெய்வோம்.
மராட்டிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிலும் மத்திய பிரதேசத்தை போலவே ஒரு ஜோதிராதித்ய சிந்தியா இருக்கக்கூடும்” என்றார்.
இவர் பேசியபோது பிற பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சட்டசபையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story