வரத்து குறைவு எதிரொலி: திண்டுக்கல் உழவர் சந்தையில் வெள்ளைப்பூண்டு விலை உயர்வு - கிலோ ரூ.200-க்கு விற்பனை


வரத்து குறைவு எதிரொலி: திண்டுக்கல் உழவர் சந்தையில் வெள்ளைப்பூண்டு விலை உயர்வு - கிலோ ரூ.200-க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 March 2020 3:15 AM IST (Updated: 13 March 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைந்ததால் திண்டுக்கல் உழவர் சந்தையில் வெள்ளைப்பூண்டு விலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல்-திருச்சி ரோட்டில் என்.ஜி.ஓ. காலனியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வரத்து மற்றும் தேவையை பொறுத்து அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

வெளி மார்க்கெட்டுகளை விட இங்கு காய்கறிகள், பழங்களின் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகள், பழங்களை வாங்கிச்செல்கின்றனர். இதன் காரணமாக திண்டுக்கல் உழவர் சந்தையில் தினசரி டன் கணக்கில் காய்கறிகள் விற்பனை நடக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் திண்டுக்கல் உழவர் சந்தையில் வெள்ளைப்பூண்டின் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.120 முதல் ரூ.160 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு தற்போது ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை ஆகிறது.

இதுகுறித்து உழவர் சந்தை விவசாயிகளிடம் கேட்ட போது, கொடைக்கானல், பூம்பாறை, தாண்டிக்குடி, மன்னவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திண்டுக்கல் உழவர் சந்தைக்கு வெள்ளைப்பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சந்தைக்கு வெள்ளைப்பூண்டு வரத்து குறைந்தது. இதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது என்றனர்.

Next Story