கோமாளிப்பாறையில் மது பிரியர்களின் கூடாரமாக மாறிய அரசுப்பள்ளி வளாகம்


கோமாளிப்பாறையில் மது பிரியர்களின் கூடாரமாக மாறிய அரசுப்பள்ளி வளாகம்
x
தினத்தந்தி 14 March 2020 3:45 AM IST (Updated: 13 March 2020 7:52 PM IST)
t-max-icont-min-icon

கோமாளிப்பாறையில் மது பிரியர்களின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர்.

குளித்தலை, 

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், திம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோமாளிப்பாறையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சில வருடங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்தநிலையில் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டிருந்தாலும் இக்கட்டிடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை.

இதன்காரணமாக இரவு நேரங்களில் இப்பள்ளி வளாகத்திற்குள் சிலர் மது அருந்தி வருதாகவும், மது பாட்டில்களை பள்ளி வளாகத்திற்குள்ளேயே தூக்கி எரிந்துவிட்டு சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வளாகம் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சில நேரங்களில் அந்த மதுபாட்டில்கள் உடைந்து பள்ளி வளாகத்திற்குள் கிடப்பதால் அது பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆபத்தாக அமைகிறது.

மேலும் இப்பள்ளியில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரை, சிலர் தங்கள் தேவைக்காக உபயோகம் செய்யப்படுகிறது. திறந்தவெளியில் இப்பள்ளி உள்ளதாலும், இப்பள்ளி அருகே வயல்வெளி இருப்பதால் பாம்பு உள்பட விஷ சந்துக்கள் பள்ளிக்குள் வர வாய்ப்புள்ளது. இதுபோன்று பல்வேறு வகையில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இப்பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு திம்மம்பட்டி பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்தநிலையில் இப்பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story