கோவில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருத்துறைப்பூண்டியில் நடந்தது
திருத்துறைப்பூண்டியில் கோவில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கோவில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ரகுராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், மாநிலக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்.
அரசாணை 318-ஐ தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மடம், அறக்கட்டளை, தேவாலயங்கள், வக்பு வாரியம் ஆகிய நிலங்களில் குடியிருப்போருக்கும் பட்டா வழங்க வேண்டும். கோவில், குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் அனைவருக்கும் நிலத்தை சொந்தமாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, சுப்பிரமணியன், சாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோபு, வேதரெத்தினம், தண்டபாணி, ஜெயபிரகாஷ், செல்வம், தங்கராசு, மணியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
நீடாமங்கலத்தில் கோவில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், கைலாசம், நகர செயலாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், கட்சி நிர்வாகிகள் பூசாந்திரம், முனியாண்டி, அண்ணாதுரை, ஜான்கென்னடி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கோவில் இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், அரசாணை 318-ஐ தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story