உடலில் காயங்களுடன் வடமாநில தொழிலாளி பிணம்: மதுபோதையில் அடித்து கொன்ற நண்பர்கள் 2 பேர் கைது


உடலில் காயங்களுடன் வடமாநில தொழிலாளி பிணம்: மதுபோதையில் அடித்து கொன்ற நண்பர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2020 3:07 AM IST (Updated: 14 March 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மது குடிக்கும் போது சரியான அளவில் பங்கிட்டு கொடுக்காததால் ஏற்பட்ட பிரச்சினையில் வடமாநில தொழிலாளியை அடித்து கொலை செய்த அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்த அணில் டூடூ (வயது 26) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகிய நிலையில், குடும்பத்தினர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 11-ந்தேதி தொழிற்சாலையையொட்டி உள்ள மதுக்கடை அருகே உள்ள மைதானத்தில் உடலில் காயங்களுடன் ரத்த கறைகளுடன் அணில் டூடூ பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நண்பர்களுடன் மது குடித்து...

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மதுக்கடை அருகே உள்ள மைதானத்தில் அணில் டூடூ அவரது நண்பர்கள் சிலருடன் சம்பவத்தன்று மதுஅருந்தியதும், மறுநாள் காலை அவர் உடலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததும் உறுதியானது.

இதனை தொடர்ந்து, அந்த தனியார் தொழிற்சாலையில் உள்ள அணில் டூடூ வின் நண்பர்களை பட்டியலிட்டு போலீசார் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

போலீஸ் விசாரணையில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி சம்பவத்திற்கு முதல் நாள் இரவில், உடன் வேலை செய்து வரும் தனது நண்பர்களான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நந்து கிஷோர் ராய் (44) மற்றும் சுப்தேவ் ராய்(23) ஆகியோருடன் சேர்ந்து அணில் டூடூ மது குடித்து உள்ளார்.

கைது

போதை தலைக்கு ஏறிய நிலையில் பாட்டு மற்றும் நடனத்துடன் அவர்கள் சந்தோஷமாக இருந்து உள்ளனர். இதற்கிடையே முன்னதாக மது குடிக்கும் போது சரியான அளவில் மதுவை பங்கீட்டு கொடுக்கவில்லை என்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் அணில் டூடூவை அவரது சொந்த மாநிலத்தை சேர்ந்த நண்பர்களான நந்து கிஷோர் ராயும், சுப்தேவ் ராயும் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வடமாநில தொழிலாளியை குடிபோதையில் அடித்து கொலை செய்த அவரது நண்பர்கள் 2 பேரையும் கவரைப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story