நாமக்கல் அருகே கோர விபத்து: லாரி-கார் மோதல்; டிரைவர் உள்பட 6 பேர் பலி


நாமக்கல் அருகே கோர விபத்து: லாரி-கார் மோதல்; டிரைவர் உள்பட 6 பேர் பலி
x
தினத்தந்தி 14 March 2020 4:11 AM IST (Updated: 14 March 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் டிரைவர் உள்பட 6 பேர் பலியானார்கள்.

நாமக்கல்,

நேற்று இரவு 11 மணியளவில் நடந்த இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு சென்றது. நாமக்கல் அருகே உள்ள சின்ன வேப்பனம் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன்பகுதி லாரிக்குள் சிக்கி கொண்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நாமக்கல் அருகே வேட்டாம்பாடி செல்லப்பா காலனியை சேர்ந்த தேவராஜ் மகன் சசிக்குமார் (வயது 23) உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். டிரைவருடன் பலியான மேலும் 5 பேரும் ஆண்கள் ஆவார்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான 6 பேரின் உடல்களை சுமார் ஒருமணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் போலீசார் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இந்த விபத்தில் காரில் வந்த டிரைவர் மட்டுமே உடனடியாக அடையாளம் தெரிந்துள்ளது. அதனால் விபத்தில் பலியானவர்கள் நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதி நாமக்கல் போலீசார் வேட்டம்பாடிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு அருளரசு மீட்பு பணிகளை பார்வையிட்டார். மேலும் விபத்து குறித்து அவர் கூறும் போது, விபத்தில் பலியான 6 பேரில் 2 பேர் நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மற்ற 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் டைல்ஸ் ஒட்ட சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கி இறந்துள்ளனர் என்றார்.இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்து காரணமாக திருச்சி-நாமக்கல் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கோர விபத்து அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story