பெங்களூரு ரெசார்ட்டில் தங்கியுள்ள மகனை சந்திக்க அனுமதிக்க கோரி மத்தியபிரதேச எம்.எல்.ஏ.வின் தந்தை கூடுதல் டி.ஜி.பி.யிடம் மனு
பெங்களூரு ரெசார்ட்டில் தங்கியுள்ள மகனை சந்திக்க அனுமதிக்க கோரி மத்தியபிரதேச எம்.எல்.ஏ.வின் தந்தை கூடுதல் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்துள்ளார்.
பெங்களூரு,
மத்தியபிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்கள் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நேற்று முன்தினம், மத்திய பிரதேச மந்திரிகள் சிலர் அவர்களை சந்திக்க வந்தனர். அந்த மந்திரிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பை உண்டாக்கியது.
இந்த நிலையில் கூடுதல் டி.ஜி.பி. அமர்குமார் பாண்டேவை பெங்களூருவில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் மத்தியபிரதேச மந்திரிகள் ஜிது பட்வாரி, பலராம் சவுத்ரி மற்றும் இங்கு தங்கியுள்ள மனோஜ் சவுத்ரி எம்.எல்.ஏ.வின் தந்தை நாராயண் சவுத்ரி ஆகியோருடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து பேசினார். அப்போது நாராயண் சவுத்ரி, போலீஸ் அதிகாரியிடம் மனு கொடுத்து, தனது மகனை சந்திக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். மனுவில் கூறியிருப்பதாவது:-
அனுமதி மறுக்கிறார்கள்
சிலரால் எனது மகனை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து இங்கு ரெசார்ட்டில் வைத்துள்ளனர். எனது மகன் என்னை சந்திக்க விரும்புகிறார். ஆனால் இங்கு பா.ஜனதாவினர் என்று கூறப்படும் சிலர் அவரை சந்திக்க அனுமதி மறுக்கிறார்கள்.
எந்த காரணமும் இன்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வோம் என்று மிரட்டுகிறார்கள். எனது மகனை பார்க்க மத்தியபிரதேசத்தில் இருந்து இங்கு வந்துள்ளோம். எந்த தாமதமும் இல்லாமல் அவரை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு நாராயண் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.
மத்தியபிரதேசத்திற்கு புறப்பட...
போலீஸ் அதிகாரியை சந்தித்து பேசிய பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெசார்ட்டில் தங்கியுள்ள மகனை சந்திக்க தந்தைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் அனுமதி வழங்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்டுள்ளோம். தனது மகனின் அழைப்பின்பேரில் தந்தை வந்துள்ளார். ஆனால் அவரை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை.
கர்நாடக போலீஸ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மகனை சந்திக்க அவரை போலீசார் அனுமதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் போலீசார் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் மத்தியபிரதேசத்திற்கு புறப்பட உள்ளதாக தகவல் கிடைத்தது. அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
பெரிதுபடுத்த விரும்பவில்லை
எங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் கட்சிக்காக அர்ப்பணித்துள்ளோம். இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பவில்லை. பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் மிகவும் பொறுமையை கடைப்பிடித்து வருகிறோம்.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.
Related Tags :
Next Story