கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது குறித்து ஹெலிகாப்டர் மூலம் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி


கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது குறித்து ஹெலிகாப்டர் மூலம் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 14 March 2020 4:00 AM IST (Updated: 14 March 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

கடலில் ரோந்து செல்வது, தத்தளிப்பவர்களை மீட்பது குறித்து பாம்பன் கடலில் ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படை வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி அருகே பருந்து இந்திய கடற்படை விமான தளம் செயல்பட்டு வருகிறது. இந்த கடற்படை விமானதளத்தில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிக்காக டார்னியர் விமானம், ஆள் இல்லாத விமானம் மற்றும் 3 ஹெலிகாப்டர்களும் உள்ளன.

மேலும் இந்த கடற்படை தளத்தில் இருந்து தினமும் இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர்கள் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அவ்வப்போது ஆள் இல்லாத விமானம் மற்றும் டார்னியர் விமானமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் இருந்து பாதுகாப்பு மற்றும் ரோந்து குறித்த பயிற்சிக்காக கடற்படை வீரர்கள் ஏராளமானோர் உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்திற்கு வந்துள்ளனர். இந்த கடற்படை வீரர்களை 3 ஹெலிகாப்டரில் அழைத்துச்சென்று பாம்பன் கடல் பகுதியில் கடலின் மேலே ஹெலிகாப்டரில் ரோந்து செல்வது,

கடலின் கீழ் நோக்கி தாழ்வாக பறந்தபடி ஹெலிகாப்டரை இயக்குவது, கடலில் தத்தளிப்பவர்களை கயிறு மூலம் மீட்டு மேலே தூக்குவது, ஹெலிகாப்டரில் இருந்தபடி கடலில் செல்லும் படகில் இறங்கி மீண்டும் ஹெலிகாப்டரில் ஏறுவது உள்ளிட்ட பல விதமான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

நேற்று தொடங்கியுள்ள இந்த பயிற்சி இன்னும் 1 வாரத்திற்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Next Story