கொரோனா வைரஸ் பாதித்தவர் மரணம்: அரசு டாக்டர்கள் அலட்சியம் சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு


கொரோனா வைரஸ் பாதித்தவர் மரணம்: அரசு டாக்டர்கள் அலட்சியம்   சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 March 2020 4:54 AM IST (Updated: 14 March 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதித்தவர் மரணம் அடைந்த விஷயத்தில் அரசு டாக்டர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் குற்றம்சாட்டினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரியங்க் கார்கே பேசும்போது கூறியதாவது:-

டாக்டர்கள் அலட்சியம்

கலபுரகியில் 76 வயது முதியவர் சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக அவர் கலபுரகியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக நடந்து கொண்டனர். இதனால் அவரை குடும்பத்தினர் ஐதராபாத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கும் மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால், அவரை கலபுரகிக்கு கொண்டு வந்தனர். அவர் வழியில் இறந்து விட்டார்.

அவரது உடலை பிணவறையில் வைத்திருந்தனர். அப்போது உரிய பாதுகாப்பு வசதிகளை செய்யவில்லை. இதனால் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்யாண-கர்நாடக பகுதியில் கலபுரகி பெரிய நகரமாகும். அதனால் அங்கு கொரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்கப்பட வேண்டும். இந்த வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மருந்து விற்பனை

விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே சோதனை செய்கிறார்கள். உள்நாட்டு பயணிகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மருந்தகங்களில் கொரோனா வைரசுக்கு மருந்து விற்பனை செய்கிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கலபுரகி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

Next Story