கொரோனா வைரஸ் எதிரொலி போலி கிருமி நாசினி மருந்துகள் பறிமுதல் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
குடோனில் பதுக்கி வைத்திருந்த போலி கிருமி நாசினி மருந்துகளை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன்பேரில் பொது இடங்களுக்கு மக்கள் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். மேலும் தொற்று கிருமிகளை அழிக்க கைகளை கழுவுவதற்காக ‘சேனட்டைசர்’ என்ற கிருமி நாசினி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் மருந்துக்கடைகளில் கிருமி நாசினி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தநிலையில் மும்பையில் உள்ள மருந்துக்கடைகளில் போலி கிருமி நாசினி மருந்துகள் விற்கப்படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
போலி கிருமி நாசினி மருந்துகள்
இந்த புகாரின்பேரில் அதிகாரிகள் மும்பையில் உள்ள மருந்துக்கடைகள், மருந்து குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காந்திவிலியில் உள்ள மொத்த மருந்து வியாபாரி ஒருவரின் குடோனில் போலி கிருமி நாசினி மருந்துகள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பிவண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைத்து தயாரித்து பின்னர் இந்த குடோனில் பதுக்கி வைத்து மும்பையில் உள்ள மருந்து கடைகளில் விற்று வந்தது தெரியவந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் உரிமம் 2 ஆண்டுக்கு முன்னரே ரத்து செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த குடோனில் இருந்த போலி கிருமிநாசினி மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மருந்து வியாபாரிக்கு அபராதமும் விதித்தனர்.
இதேபோல வக்கோலா பகுதியில் தனியார் நிறுவனம் தயாரித்து வந்த போலி கிருமிநாசினி மருந்துகளையும் அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story