அங்கன்வாடி மையங்களில் 60 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தகவல்
தென்காசி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 60 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவதாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கூறினார்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 60 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவதாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கூறினார்.
குழந்தைகள் வளர்ச்சி விழிப்புணர்வு
குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் வகையில் பிரதமரின் போஷான் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் போஷான் பக்வாடா என்ற திட்டம் அதாவது குழந்தைகள் வளர்ச்சி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற நிகழ்ச்சி கடந்த மார்ச் 8–ந் தேதி முதல் வருகிற 22–ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசூர்யா மற்றும் தென்காசி வட்டார அலுவலர் தான்யா ஆகியோர் கூறியதாவது:–
பாரத பிரதமரின் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் குழந்தைகள் வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை கண்காணிக்கிறோம். இந்த குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற உயரம் இருக்கிறதா? உயரத்துக்கு ஏற்ற உடல் இருக்கிறதா? அல்லது மெலிந்து காணப்படுகிறதா? வயதுக்கு ஏற்ற எடை உள்ளதா? என்பது குறித்து அளவீடுகள் எடுக்கிறோம். இதில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர பிறந்து 6 மாத குழந்தை முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளை கண்காணிக்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும் போது இரண்டரை கிலோவுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோரையும் கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
சத்து மாவு கொடுக்க வேண்டும்
எடை குறைந்த குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர் கூட கொடுக்க கூடாது. 6 மாதங்களுக்கு பிறகு துணை உணவு கொடுக்க வேண்டும். அதன் பிறகு 3 வயதுக்கு மேல் சத்துமாவு கொடுக்க வேண்டும். அங்கன்வாடியில் எல்லா குழந்தைகளுக்கும் சத்துமாவு வழங்குகிறோம். 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர் அங்கன்வாடிகளில் பதிவு செய்ய வேண்டும். அங்கு அவர்களுக்கு சத்துமாவு வழங்கப்படும். அங்கன்வாடியில் சேர்த்த பிறகு தொடர்ந்து சத்துமாவு வழங்கப்படும். ஒரு குழந்தை கருவில் இருந்து கவனிக்கப்பட வேண்டும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு நல்ல சத்துக்கள் நிறைந்த உணவு வழங்கப்பட வேண்டும்.
குழந்தை பிறந்தது முதல் கவனமாக ஊட்டச்சத்து வழங்கினால் அந்த குழந்தை பரிபூரண வளர்ச்சி அடையும். இதில் அந்த வீட்டின் ஆண்களும் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும். குழந்தைக்கு கர்ப்பத்தில் இருந்து 270 நாட்களும், ஒரு வயது முதல் 365 நாட்களும் 2 வயதில் இருந்து 365 நாட்களும் கவனிக்கப்பட வேண்டும். தற்போது குழந்தைகளில் 50 சதவீதம் பேருக்கு ரத்தசோகை உள்ளது என தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளின் நலனில் கருத்தில் கொண்டு சிறந்த உணவுகளை வழங்க வேண்டும். சத்து மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
60 ஆயிரம் குழந்தைகள்
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 12 வட்டாரங்கள் உள்ளன. இதில் முதன்மை அங்கன்வாடி மையங்கள் 1180–ம், குறு அங்கன்வாடி மையங்கள் 136–ம் உள்ளன. இவை அரசு கட்டிடங்களில் 1011 இடங்களிலும், அரசு இலவச கட்டிடங்களில் 34 இடங்களிலும், தனியார் வாடகை மற்றும் இலவச கட்டிடங்களில் 271 இடங்களிலும் இயங்குகின்றன. தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 5 வயது வரை 82 ஆயிரத்து 394 குழந்தைகள் உள்ளனர். இதில் 60 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு வழங்கப்பட்டு பயன் பெறுகிறார்கள். மேலும் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 855 கர்ப்பிணி தாய்மார்களும், 1,269 பாலூட்டும் தாய்மார்களும் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story