நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் வர்த்தக கழக கூட்டத்தில் வலியுறுத்தல்
பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என வர்த்தக கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நெல்லை,
பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என வர்த்தக கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டம்
நெல்லை மாவட்ட வர்த்தக கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணை தலைவர்கள் பெரியபெருமாள், சண்முகையா பாண்டியன், மார்ட்டின், வேம்பு, தெற்கு மாவட்ட தலைவர் பண்ணை செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், சென்னையில் வருகிற மே மாதம் 5–ந் தேதி நடைபெறும் 37–வது வணிகர் தின மாநில மாநாட்டில் வணிகர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ளவேண்டும். நெல்லை மாநகராட்சி பகுதியில் நடைபெறுகின்ற பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் அமைத்தல் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட துணை தலைவர்கள் அருள் இளங்கோ, சோமு, இணை செயலாளர் மாணிக்கம், பொருளாளர் மீரான், வியாபாரி சங்க தலைவர் சந்தோஷ நாடார், மேற்கு மாவட்ட தலைவர் ஜோயல் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை செலாளர் சாலமோன் நன்றி கூறினார்.
ஆன்லைன் வர்த்தகம்
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:–
வணிகர்களின் வாழ்வாதாரமான சில்லரை வணிகத்தை பெரிதும் பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகம், அன்னிய முதலீடு ஆகியவற்றை தடை செய்ய வேண்டும். சரக்கு சேவை வரி விதிப்பை எளிமைப்படுத்தவேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால், சில்லரை வணிகம் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. சில்லரை வணிகம் அதிகரித்தால் தான் நாட்டின் பொருளாதாரம் உயரும்.
வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்த குளிர்பானங்களாலும் சில்லரை வணிகம் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. அன்னிய முதலீட்டுக்கு காங்கிரஸ் ஒரு கதவை திறந்து விட்டது. பாரதீய ஜனதா அரசு கதவையே அகற்றிவிட்டது. அந்த அளவிற்கு அன்னிய முதலீடு அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு கேடு விளைவிக்கும். வங்கிகள் திவால் ஆனது ஏற்கனவே எதிர்பார்த்தது தான். பொருளாதார அனுபவம் இல்லாதவர் நிதி மந்திரியாக இருப்பது தான் பொருளாதார சீரழிவுக்கு காரணம் என்று சுப்பிரமணிய சுவாமி சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story