தூத்துக்குடி அருகே படகு மூழ்கியது: நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்பு


தூத்துக்குடி அருகே படகு மூழ்கியது: நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 15 March 2020 4:30 AM IST (Updated: 14 March 2020 6:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

படகு மூழ்கியது 

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருடைய மகன் பெர்க்மான்ஸ் (வயது 35). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று அதிகாலையில் திரேஸ்புரம், தாளமுத்துநகரை சேர்ந்த மைக்கேல் மகன் வினோத் (34), இன்னாசிபாலு மகன் வினோத் (35), இன்னாசி மகன் சின்னவேல்ராஜா (35), சிவன்ராஜ் (45) ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டார்.

அவர்கள் கீழவைப்பார் பகுதியில் இருந்து சுமார் 15 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென படகில் ஓட்டை ஏற்பட்டதால், படகு கடலில் மூழ்கியது. இதனால் படகில் இருந்த 5 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

மீனவர்கள் மீட்பு 

அப்போது தருவைகுளத்தை சேர்ந்த மீனவர் சவுந்திரராஜ் உள்ளிட்டவர்கள் படகில் அந்த பகுதியில் மீன்பிடிக்க வந்தனர். அவர்கள், 5 மீனவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே 5 பேரையும் பத்திரமாக மீட்டு, படகில் ஏற்றிக்கொண்டு கரை திரும்பினர்.

தொடர்ந்து நீந்தியதால் 5 மீனவர்களும் சோர்வாக காணப்பட்டனர். இதனால் அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Next Story