கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: களக்காட்டில் வாழைத்தார் விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை


கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி:  களக்காட்டில் வாழைத்தார் விலை வீழ்ச்சி  விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 15 March 2020 4:00 AM IST (Updated: 14 March 2020 8:01 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கொரானோ வைரஸ் பாதிப்பு எதிரொலியாக களக்காட்டில் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்தது.

களக்காடு, 

கேரளாவில் கொரானோ வைரஸ் பாதிப்பு எதிரொலியாக களக்காட்டில் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வாழைத்தார் அறுவடை 

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். கடந்த மாதத்தில் இருந்து வாழைத்தார் அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இங்கு அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை கேரள மாநில வியாபாரிகள் லாரிகளில் மொத்தமாக வாங்கி சென்று, அங்குள்ள சந்தைகளில் விற்பது வழக்கம். அறுவடை தொடக்கத்தின்போது, ஏத்தன் ரக வாழைத்தார் ஒரு கிலோ ரூ.32–க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

விலை வீழ்ச்சி 

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் கொரானோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் அங்குள்ள சந்தைகளில் வாழைத்தார்களை வாங்குவதற்கு பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்வரவில்லை. இதனால் அங்கு வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன.

இதையடுத்து களக்காடு பகுதியிலும் அறுவடை செய்யப்படும் ஏத்தன் ரக வாழைத்தார் ஒரு கிலோ ரூ.11 என்ற வீதத்தில் குறைந்த விலையிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒரு வாழைத்தாரை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் ரூ.250 வரையிலும் செலவு செய்கின்ற நிலையில், மிகவும் குறைந்த விலைக்கே அவற்றை கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அரசு விலை நிர்ணயம் செய்ய... 

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே வாழைத்தார்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டும். களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story