போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு; சூப்பிரண்டு பாண்டியராஜன் வழங்கினார்


போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு; சூப்பிரண்டு பாண்டியராஜன் வழங்கினார்
x
தினத்தந்தி 14 March 2020 10:30 PM GMT (Updated: 14 March 2020 3:10 PM GMT)

கோடை வெயிலை சமாளிக்க கரூர் போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை சாறு வழங்குவதை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

கரூர், 

கரூரில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்ககூடும் என வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளதால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவது, பஸ் நிலையம்-மருத்துவமனை உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் வைப்பது என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது கரூர் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆறு வறண்டு பாலைவனம் போல் மணற்பாங்காக காட்சியளிப்பதால், நிலத்தடி நீர்மட்டமும் சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை, மாலை வேளையில் கரூர் மனோகரா கார்னர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, பெரியார் வளைவு உள்ளிட்ட இடங்களில் கரூர் நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வெப்பத்தின் தாக்கம் உடலில் இறங்காமல் இருக்கும் வகையிலான தொப்பி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

 தொடர்ந்து இந்த ஆண்டு கோடை காலமான ஜூன் மாதம் முடியும் வரை காலை 11 மணி, மாலை 4.30 மணியளவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு எலுமிச்சை சாறு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை கரூர் மனோகரா கார்னரில் போக்குவரத்து போலீசாருக்கு கோடை கால எலுமிச்சை சாறு தொடர்ச்சியாக வழங்குவதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

மேலும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும், உடல்நல பராமரிப்புகள் குறித்தும் அவர் ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், கரூர் டவுன் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, கரூர் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக சாலை விதிகளை முறையாக கடைபிடித்து விபத்தினை தடுக்க ஒத்துழைப்பு நல்க கோரி கரூர்-கோவை ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு துண்டு பிரசுரம் வழங்கியதோடு, தாகம் தணிக்க எலுமிச்சை சாறினையும் வினியோகம் செய்தார். 

Next Story