வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 249 வாகனங்கள் பதிவு
பி.எஸ்.4 என்ஜின் வாகனங்களை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு பதிவு செய்ய முடியாது என்பதால் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 249 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,
பொது இடங்களில் மாசு ஏற்படுவதை தடுக்க அதிக புகைவெளியிடும் பி.எஸ்.4 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பி.எஸ்.4 வாகனங்கள் இந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதிவரை மட்டுமே பதிவு செய்யப்படும். அதன்பிறகு இந்த வாகனங்கள் பதிவு செய்யப்படமாட்டாது.
எனவே பி.எஸ்.4 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களை வாங்கியவர்கள் தங்கள் வாகனங்களை பதிவு செய்து கொள்வதற்கு வசதியாக சனிக்கிழமைகளில் விடுமுறையாக இருந்தாலும் சிறப்பு முகாம் நடத்தி பதிவு செய்ய போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த 7-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது. நேற்று 2-வது சனிக்கிழமை அரசு விடுமுறை நாளாக இருந்தாலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி தலைமையில் சிறப்புமுகாம் நடந்தது. இதில் 30 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது. அதேபோன்று கடந்த வாரம் 45 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.4 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் வாங்கியவர்கள் 31-ந் தேதிக்குள் பதிவு செய்யவில்லை என்றால் அதன்பிறகு பதிவு செய்யமுடியாது. அதன்பிறகு பி.எஸ்.6 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று ராணிப்பேட்டை, அரக்கோணம், குடியாத்தம், திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. வேலூர் உள்பட அனைத்து இடங்களிலும் 2 நாட்கள் நடந்த இந்த சிறப்பு முகாம்களில் 249 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 21 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது.
Related Tags :
Next Story