மாவட்ட செய்திகள்

தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடி செய்த கும்பல் துறையூர் பகுதியில் தங்கி வீடுகளில் கொள்ளையடித்தது அம்பலம் + "||" + Fraud for gold jewelery The gang has robbed homes in Thuraiyur area

தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடி செய்த கும்பல் துறையூர் பகுதியில் தங்கி வீடுகளில் கொள்ளையடித்தது அம்பலம்

தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடி செய்த கும்பல் துறையூர் பகுதியில் தங்கி வீடுகளில் கொள்ளையடித்தது அம்பலம்
தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக மோசடி செய்த கும்பல் துறையூர் பகுதியில் தங்கி வீடுகளில் கொள்ளையடித்ததும் அம்பலம் ஆனது.
உப்பிலியபுரம்,

உப்பிலியபுரம் அருகே வைரி செட்டிப்பாளையம் குரும்பர்தெருவில் வசிப்பவர் சாந்தி(வயது 50). கடந்த 11-ந்தேதி இவர் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 3 பேர், நகைகளுக்கு மெருகேற்றி(பாலீஷ்) தருவதாக கூறியுள்ளனர். அப்போது, சாந்தி தனது வெள்ளி மெட்டியை கழற்றி கொடுத்தார். அதை அவர்கள் மெருகேற்றி கொடுத்தனர்.


அதில் அவருக்கு திருப்தி ஏற்படவே, கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கொடுத்தார். அதை அவர்கள் மெருகேற்றி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின்னர் அந்த நகையை, சாந்தி தனது கழுத்தில் அணிந்தார். அப்போது நகையின் எடை பாதியாக குறைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பீகார் மாநில கும்பல்

வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். உடனே அந்த பகுதியில் இருந்த நகைக்கடைக்கு சென்று நகையின் எடையை சரிபார்த்த போது, 3 பவுன் சங்கிலி 1½ பவுன் தான் இருந்தது. உடனே இதுபற்றி உப்பிலியபுரம் பகுதியில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே சாந்தியின் தங்க சங்கிலியை மெருகேற்றி கொடுத்த வாலிபர்கள் 3 பேரில் 14 வயதுடைய ஒரு சிறுவன் மட்டும் சிக்கினான். அவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில், துறையூர் சிலோன் அலுவலகம் அருகே வாடகைக்கு வீடு எடுத்து பீகாரை சேர்ந்த ஒரு கும்பல் தங்கி இருப்பது தெரியவந்தது.

மெகந்தி போடுவதுபோல்

இதனையடுத்து அந்த வீட்டுக்கு சென்று அங்கிருந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த அரவிந்த்குமார்(30), சதுரக்கான்குமார்(25), தீபக்குமார்(30), பப்புகுமார்(27), சுராஜ்குமார்(22), அமர்தீப்குமார்(19), பபின்குமார்(26), குந்தன்குமார்(25) என்பது தெரியவந்தது. அத்துடன் இவர்கள் பகல் நேரங்களில் கிராமங்களுக்கு சென்று பெண்களுக்கு மெகந்தி போடுவது போல் பேச்சு கொடுப்பார்கள்.

அப்போது, உங்கள் மெட்டி அழுக்காக இருக்கிறதே, இதை இலவசமாக மெருகேற்றி தருகிறோம் என்று கூறி, அதை இலவசமாக மெருகேற்றி கொடுப்பார்கள். அதில் பெண்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு, அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை தங்கத்தை கரைத்து எடுக்கும் திராவக கலவையில் போட்டு கரைத்து தங்கத்தை திருடி விடுவார்கள். பின்னர் அந்த கலவையில் இருந்து தங்கத்தை மொத்தமாக பிரித்து எடுத்து விடுவார்கள்.

வீடுகளில் கொள்ளை

இதுதவிர பகலில் மெகந்தி போடுவது போல் கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிந்து நோட்டமிடும் இந்த கும்பல் ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றதும் அம்பலம் ஆனது. இந்த கும்பல் வேங்கடத்தானூரில் உள்ள ஒரு வீட்டில் 2½ பவுன் நகையையும், கீழக்குன்னுபட்டியில் ஒருவீட்டில் பகல் நேரத்தில் கதவை உடைத்து 4¾ பவுன் நகைகளை திருடியதும் தெரியவந்தது. மேலும் இவ்வாறு திருடும் நகைகளை பங்கிடும் இவர்கள், சுழற்சி முறையில் பீகார் சென்று வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறுவன் உள்பட 9 பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 8 வாலிபர்கள் திருச்சி மத்திய சிறையிலும், சிறுவன் சிறார் காப்பகத்திலும் அடைக்கப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7¼ பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.