கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 March 2020 12:30 AM GMT (Updated: 14 March 2020 7:12 PM GMT)

கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்த ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அலுவலகத்துக்கு செல்பவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் பேசிய நபர் கும்பகோணம் ரெயில் நிலையம் மற்றும் தண்டவாள பகுதியில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இது குறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் ரெயில் நிலையம் மற்றும் தண்டவாள பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து போலீசார் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த தொலைபேசி எண் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ஆவனியாபுரம் செட்டித்தெருவை சேர்ந்த ஹாஜாநஜ்முதீன் மகன் நிசார்அகமது(வயது29) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருநீலக்குடி போலீசார் நிசார்அகமதுவை கைது செய்து அவர் ஏன் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story