தஞ்சையில் உடல் திறனாய்வு போட்டிகள் 1,000 மாணவ-மாணவிகள் பங்கேற்பு


தஞ்சையில் உடல் திறனாய்வு போட்டிகள் 1,000 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 March 2020 11:30 PM GMT (Updated: 14 March 2020 7:58 PM GMT)

தஞ்சையில் நடந்த உடல் திறனாய்வு போட்டிகளில் 1,000 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

உலக உடல் திறனாய்வு திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடல் திறனாய்வு போட்டிகள் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்பட்டன.

தஞ்சை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடந்த இந்த போட்டிகளில் 8, 9, 10 ஆகிய மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் உடல் திறனாய்வு போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில் 250 பள்ளிகளை சேர்ந்த 1,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

உயரம் தாண்டுதல்

மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறும்போது, இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் நாகையில் நடக்கும் மண்டல அளவிலான போட்டிகளுக்கு அழைத்து செல்லப் படுவர். மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தலா ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

முக்கியத்துவம்

விளையாட்டு துறையில் மாணவர்கள் சிறந்து விளங்கவும், கோடைகால இருப்பிட பயிற்சி முகாம், விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து கல்வி பயிலவும், சிறப்பு அகாடமியில் சேர்ந்து பயன்பெறவும் இப்போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஆக்கி பயிற்சியாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

Next Story