வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாமல் இயங்கும் வாகனங்கள் பறிமுதல் புதிதாக பொறுப்பேற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை


வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாமல் இயங்கும் வாகனங்கள் பறிமுதல் புதிதாக பொறுப்பேற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 March 2020 4:15 AM IST (Updated: 15 March 2020 2:03 AM IST)
t-max-icont-min-icon

வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தாமல் இயங்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று புதிதாக வட்டார போக்குவரத்து அலுவலராக பொறுப்பேற்ற வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்த பாலகுருநாதன் திருச்சி போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலராக (செயலாக்கம்) இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக நாமக்கல்லில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்த ஆர்.வெங்கடேசன், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலராக நியமிக்கப்பட்டார்.

இவர் நேற்று விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் 80 கி.மீ. வேகத்திலும் இயக்கப்பட வேண்டும். இவை விழுப்புரம் மாவட்டத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

அதிவேகமாக இயக்கி விபத்துகளில் சிக்குவதை தவிர்க்க அனைத்து வாகனங்களிலும் கட்டாயம் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும். இந்த கருவியை பொருத்தாமல் வாகனங்கள் இயக்கப்படும் பட்சத்தில் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வாகனமும் பறிமுதல் செய்யப்படும். மேலும் வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தும் நிறுவனமே வருடத்திற்கு ஒருமுறை அந்த கருவியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும். அது அந்நிறுவனத்தின் பொறுப்பாகும். இவ்வாறு அவர் கூறினார். இவர் இதற்கு முன்பு பெருந்துறையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றியுள்ளார். இவருடைய சொந்த ஊர் சேலம். இவருக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story