உருட்டு கட்டையால் தாக்கி தாய் கொலை சொத்து தகராறில் வாலிபர் வெறிச்செயல்


உருட்டு கட்டையால் தாக்கி தாய் கொலை சொத்து தகராறில் வாலிபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 15 March 2020 6:00 AM IST (Updated: 15 March 2020 1:57 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் உருட்டு கட்டையால் தாயை அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவிலை சேர்ந்தவர் செல்வம். லாரி டிரைவரான இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பாக்யலட்சுமி (வயது 43). இவர் கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆயாவாக வேலை செய்து வந்தார். இவரது மகன் சதீஷ்குமார் (24). இவர் கேரளாவில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் பாக்யலட்சுமி தனக்கு சொந்தமான வீட்டுமனையை கடன் பிரச்சினைக்காக வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். இதனால் தாய்க்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அடித்துக்கொலை

அப்போது வீட்டை விட்டு வெளியே சென்ற சதீஷ்குமார், பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பாக்யலட்சுமி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த சதீஷ்குமார் வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் தனது தாயின் தலையில் அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாக்யலட்சுமி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பின்னர் சதீஷ்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாக்யலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் தாயை மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story