சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்வி துணை இயக்குனர் ஆய்வு


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்வி துணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 15 March 2020 5:00 AM IST (Updated: 15 March 2020 2:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவக்கல்வி துணை இயக்குனர் டாக்டர் ராகவன் ஆய்வு நடத்தினார்.

சேலம்,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களையும் பயமுறுத்தி வரும் இந்த வைரஸ் தாக்கி இந்தியாவில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரும், டெல்லியை சேர்ந்த மூதாட்டி ஒருவரும் என 2 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கினால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளன. அதில் மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

பாதிப்பு இல்லை

இதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரக துணை இயக்குனர் டாக்டர் ராகவன் தலைமையில் தனிக்குழுவினர் நேற்று மாலை சேலத்திற்கு வந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது கொரோனா வைரசுக்கு என்று தனியாக அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர்.

அங்கு மருந்து உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் அனைத்தும் போதுமான அளவு இருப்பு உள்ளதா? என்று பார்வையிட்டனர். தொடர்ந்து டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது கொரோனா வைரஸ் பாதித்து யாராவது வந்தால் அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும் போது, சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் தனபால், பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சுரேஷ்கண்ணா, நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story