தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஜமாத் தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை தொடர் போராட்டங்களை கைவிட மறுப்பு


தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஜமாத் தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை தொடர் போராட்டங்களை கைவிட மறுப்பு
x
தினத்தந்தி 15 March 2020 4:59 AM IST (Updated: 15 March 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் ஜமாத் தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்தனர்.

தேனி,

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை கண்டித்து முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்திலும், கம்பம், பெரியகுளத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலையில் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் போலீஸ் அதிகாரிகள், ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மாலை 6 மணியளவில் தொடங்கிய கூட்டம் இரவு 8.30 மணி வரை நடந்தது. கூட்டம் முடிந்தவுடன் கூட்டரங்கை விட்டு வெளியே வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிருபர்கள் கேட்டனர். ஆனால், அதற்கு அவர் பதில் எதுவும் அளிக்காமல் சென்று விட்டார்.

பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற ஜமாத் தலைவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த கூட்டத்தில், தொடர் போராட்டங்களை கைவிடுமாறு துணை முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்து விட்டோம். இந்த சட்டங்கள் தொடர்பாக 3 கேள்விகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும், அரசு இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுத்து வருவதால் போராட்டத்தை கைவிடுமாறும் அதிகாரிகள் துணை முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார். ஆனால், போராட்டங்களை கைவிட நாங்கள் முடிவு எடுக்க முடியாது. அது, மாநில ஜமாத் நிர்வாகிகள் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினோம். இந்த கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை’ என்றனர்.

இந்த கூட்டம் குறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறுகையில், ‘அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை’ என்றார்.

Next Story