காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்


காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 15 March 2020 5:01 AM IST (Updated: 15 March 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

புதுவை வந்த காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்களில் காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் என பலரும் அடக்கம்.

புதுவை வந்து விடுதிகளில் அறை எடுத்து தங்கும் இவர்களை குறிவைக்கும் ஒரு சில போலீசார் அவர்களை மடக்கி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கள்ளக்காதல் ஜோடிகள்

பெற்றோருக்கு தெரியாமல் வரும் காதல்ஜோடிகளும், குடும்பத்தினருக்கு தெரியாமல் வரும் கள்ளக்காதல் ஜோடிகளும் இதை பெரிது படுத்தாமல் தப்பித்தால் போதும் என்ற நிலையில் இருக்கும் பணத்தை போலீசாரிடம் கொடு்த்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பும் நிலை இருந்து வருகிறது. இந்தநிலையில் காதல் ஜோடி ஒன்றை மடக்கி பணம் பறித்த போலீசாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

விடுதியில் சோதனை

புதுவை அம்பலத்தடையார் மடத்து வீதியில் (கொசக்கடை வீதி) உள்ள விடுதி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் பகுதியை சேர்ந்த 2 காதல் ஜோடிகள் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இது பெரியகடை காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 2 போலீஸ் காரர்களும் சோதனை என்ற பெயரில் அந்த விடுதிக்கு சென்றுள்ளனர். காதல் ஜோடி தங்கியிருந்த குறிப்பிட்ட அந்த அறைக்கு சென்று சோதனை என்ற பெயரில் அவர்களிடம் தகாத முறையில் பேசியுள்ளனர்.

பணம் பறிப்பு

மேலும் ஒரு காதல் ஜோடியை மிரட்டி அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது. அடுத்த காதல் ஜோடியிடம் பெரிய அளவில் பணம் இல்லை என்று கூறப் படுகிறது.

அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்ட போலீசார் காதலன் முன்னிலையில் காதலியான இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்து சில நாட்கள் ஆன நிலையில் இதுகுறித்த தகவல்கள் பரவியது.

இந்த தகவல் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவின் கவனத்துக்கும் சென்றது. இதுதொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கம்

இதன்பேரில் அன்றைய தினம் ரோந்துப்பணிக்கு சென்ற பெரியகடை போலீஸ்காரர் சதீஷ்குமார், ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோரை அழைத்து விசாரித்தனர். இதில் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்தது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் காதல் ஜோடிகளிடம் அவர்கள் இருவரும் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து காதல் ஜோடிகளை அழைத்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


Next Story