தடுப்புச்சுவரில் கார் மோதி கோர விபத்து குழந்தை, 2 பெண்கள் பலி ஒர்லி அருகே சோகம்


தடுப்புச்சுவரில் கார் மோதி கோர விபத்து குழந்தை, 2 பெண்கள் பலி ஒர்லி அருகே சோகம்
x
தினத்தந்தி 15 March 2020 5:11 AM IST (Updated: 15 March 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

ஒர்லி அருகே தடுப்புச்சுவர் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், 6 மாத குழந்தை மற்றும் 2 பெண்கள் பலியாகினர்.

மும்பை,

மும்பை அந்தேரியை சேர்ந்த பெண் பாவனா (வயது55), இவரது மகள் நமிகா (30). இவரது 6 மாத குழந்தை நிஷிகா. பாவனா, நமிகா ஆகிய இருவரும் குழந்தை நிஷிகாவுடன், ஒர்லியில் வசிக்கும் உறவினரான ஜூயு குருநானி (52) என்பவரின் வீட்டிற்கு நமிகாவின் காரில் நேற்று முன்தினம் சென்றிருந்தனர்.

இதன்பின்னர் ஜூயு குருநானியையும் அழைத்து கொண்டு அந்தேரிக்கு அதே காரில் திரும்பி வந்துகொண்டிருந்தனர். ஹாஜி அலி ரோடு அருகே கார் வந்த போது, திடீரென நமிகாவின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. மேலும் காரில் இருந்த 6 மாத குழந்தை மற்றும் 3 பெண்களும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஒர்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பாவனா, ஜூயு குருநானி மற்றும் 6 மாத குழந்தை நிஷிகா ஆகியோர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். காரை ஓட்டி வந்த நமிகா படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story