காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கினார் சட்டக்கல்லூரி மாணவர் மீது மாணவி பரபரப்பு புகார்


காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கினார்   சட்டக்கல்லூரி மாணவர் மீது மாணவி பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 15 March 2020 5:19 AM IST (Updated: 15 March 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியதாக சட்டக்கல்லூரி மாணவர் மீது சக மாணவி ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.

திரு.வி.க.நகர், 

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் 25 வயது மாணவி ஒருவர், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கல்லூரியில் என்னுடன் படித்துவரும் பாலாஜி என்ற மாணவர், தனது தாயார் நீதிபதியாக இருப்பதாக பொய்யாக கூறி என்னுடன் பழகினார். நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகினோம். இதில் நான் கர்ப்பமானேன்.

மிரட்டல்

இதனால் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தினேன். அதற்கு பாலாஜி, அவருடைய தாய் கிருஷ்ணவேணி, அவருடைய சகோதரி சுஜாதா ஆகிய 3 பேரும் சேர்ந்து என்னை வலுக்கட்டாயமாக கருவை கலைக்க செய்தனர்.

மேலும் என்னை பாலாஜி திருமணம் செய்வதாக இருந்தால் ரூ.40 லட்சம் வரதட்சணை தரவேண்டும். இல்லாவிட்டால் பாலாஜியுடன் நான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விடுவதாகவும், கொலை மிரட்டலும் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story