குடியாத்தம் அருகே, விவசாய நிலத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
குடியாத்தம் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.
குடியாத்தம்,
குடியாத்தம் அருகே ஆந்திர மாநில வனப்பகுதியில் மொகிலி அருகே முகாமிட்டிருந்த 15 காட்டு யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பம் ஊராட்சி கீழ்கொல்லப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி, நாகரத்தினம், தினகரன், ஜெயராமன் உள்ளிட்டோர் நிலங்களில் புகுந்த காட்டு யானைகள் மாமரங்கள், வாழை மரங்கள், நெற்பயிர், தென்னை மரங்கள், தீவன பயிர்கள் ஆகியவற்றை நாசப்படுத்தின. இதில் பல லட்சம் மதிப்புள்ள பயிர்கள் சேதமடைந்தன.
மேலும் அந்த நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளை முற்றிலும் சேதப்படுத்தியது. அங்குள்ள குழாய்களை யானைகள் நாசப்படுத்தின. நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய, விடிய விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்த யானைகள் கூட்டத்தை கிராம மக்கள் வனத்துறையினர் உதவியுடன் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
சேதமடைந்த மா மரங்கள், வாழைமரம் உள்ளிட்ட பயிர்களின் சேதங்கள் குறித்து வருவாய்த்துறையினர், வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
சில நாட்களாக அடங்கி இருந்த யானைகள் கூட்டம் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்யும் சம்பவம் தொடர்வதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
மேலும் வனத்துறையினர் யானைகள் கூட்டத்தை மீண்டும் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story