தாம்பரம், ஆவடியில் மின்சார வாரியத்தில் ‘கேங் மேன்’ பதவிக்கு ஆட்கள் தேர்வு திரளானவர்கள் பங்கேற்றனர்


தாம்பரம், ஆவடியில் மின்சார வாரியத்தில் ‘கேங் மேன்’ பதவிக்கு ஆட்கள் தேர்வு திரளானவர்கள் பங்கேற்றனர்
x
தினத்தந்தி 16 March 2020 3:45 AM IST (Updated: 15 March 2020 11:27 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் மற்றும் ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேவையான கேங் மேன் பதவிக்கு ஆட்கள் தேர்வு நேற்று நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கம்பங்கள் நடுதல், களப்பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக முதல் முறையாக ‘கேங் மேன்’ பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய வாரியம் முடிவு செய்தது. அதன்படி, 5 ஆயிரம் கேங் மேன் (பயிற்சி) பதவிக்கு ஆட்கள் தேர்வு குறித்து கடந்த ஆண்டு மார்ச் 7-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், என்ஜினீயரிங், முதுநிலை பட்டப்படிப்பு படித்த 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுக்கு மாவட்ட வாரியாக முதல் கட்டமாக உடல்தகுதி தேர்வு கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொடர் மழை காரணமாக உடல் தகுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மழைக்கு பின்னர் மற்றொரு தேதியில் உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடந்து முடிந்து உள்ளது.

இதில் வெற்றி பெற்ற 15 ஆயிரம் பேருக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள மின்னஞ்சல் மூலம் நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது. அத்துடன் மின்சார வாரிய இணையதள முகவரிக்கு சென்று நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதனை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு சென்னையில் தாம்பரம் மற்றும் ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியல் எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதேபோல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

‘தேர்வு எழுதியவர்கள் தாங்கள் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்து உள்ளார்.

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்கள் கூறும் போது, ‘தேர்வு எளிமையாக தான் இருந்தது. தேர்வை நல்ல முறையில் எதிர்கொண்டு உள்ளோம். முதலில் 5 ஆயிரம் பேரை தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 10 ஆயிரம் பேரை தேர்வு செய்வதாக அமைச்சர் அறிவித்து உள்ளார். அமைச்சர் கூறியபடி தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

Next Story