மாவட்ட செய்திகள்

கொரோனா, பறவை காய்ச்சல் பீதி: கோழி கறி கிலோ ரூ.50 ஆக சரிவு -மீன் வாங்க பொதுமக்கள் ஆர்வம் + "||" + Coronavirus, Avian Influenza Panic: Chicken curry dip to Rs 50 per kg - Public interest in buying fish

கொரோனா, பறவை காய்ச்சல் பீதி: கோழி கறி கிலோ ரூ.50 ஆக சரிவு -மீன் வாங்க பொதுமக்கள் ஆர்வம்

கொரோனா, பறவை காய்ச்சல் பீதி: கோழி கறி கிலோ ரூ.50 ஆக சரிவு -மீன் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் காரணமாக திருப்பத்தூரில் கோழி கறி விலை சரிந்துள்ளது. மீன் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். இதனால் மீன் கடையில் கூட்டம் காணப்பட்டது.
திருப்பத்தூர்,

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் பக்கத்து மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் கோழிக்கறி விற்பனை படிப்படியாக குறையத் தொடங்கியது. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கோழி கறி விலை தொடர்ந்து கடும்வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

திருப்பத்தூர் பகுதியில் கோழிப்பண்ணைகளில் இருந்து முன்பு ஒரு கிலோ கோழி ரூ.200 வரை விற்கப்பட்டது. தற்போது கோழிப்பண்ணையில் ஒரு கிலோ உயிருள்ள கோழி ரூ.36-க்கு விற்கப்படுகிறது. கடைகளில் ஒரு கிலோ கோழி கறி ரூ.50-க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் கோழி கறியை யாரும் விரும்பி வாங்கவில்லை. பல இறைச்சிக் கடையில் ஒரு கிலோ வாங்கினால் 4 முட்டைகள் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு சலுகைகளை வழங்கினாலும் கோழி கறி வாங்க பொதுமக்களிடம் ஆர்வமில்லை. எனவே கோழி வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா, பறவை காய்ச்சல் பீதி காரணமாக கோழி பிரியாணி விற்பனையும் பாதிப்பு அடைந்துள்ளது.

இதுகுறித்து கோழி மொத்த வியாபாரி பழனிவேல் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக கோழிக்கறி விற்பனை முழுமையாக பாதிப்படைந்துள்ளது. வாங்கிய விலைக்கு விற்க முன் வந்தாலும் கோழிக்கறி வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இதனால் கோழி வியாபாரிகள், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த தொழிலை விடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

வஞ்சிரம் மீன் ரூ.700-க்கு விற்கப்பட்டது. மீன்வாங்கவே பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். இதனால் மீன் கடைகளில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.