போலி திருமண சான்று தயாரித்து பெண் என்ஜினீயருக்கு காதல் தொல்லை நெல்லை வாலிபருக்கு வலைவீச்சு


போலி திருமண சான்று தயாரித்து பெண் என்ஜினீயருக்கு காதல் தொல்லை நெல்லை வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 March 2020 4:00 AM IST (Updated: 16 March 2020 12:55 AM IST)
t-max-icont-min-icon

போலி திருமண சான்று தயாரித்து பெண் என்ஜினீயருக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

திருச்சி,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சங்கரலிங்கத்தின் மகன் வாசுதேவன்(வயது 25). இவர் கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த ஆண்டு எம்.இ. படித்து முடித்தார். அப்போது, அவருடன் படித்த திருச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை விரும்பிய வாசுதேவன், அவருடைய செல்போனுக்கு காதல்ரசம் சொட்ட, சொட்ட குறுந்தகவல்களை அனுப்பினார்.

மேலும் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, அந்த பெண்ணிடம் தனது காதலை வாசுதேவன் நேரில் கூறினார். அப்போது, அந்த பெண் அவரை கண்டித்து காதலை ஏற்க மறுத்தார். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து குறுந்தகவல்கள் அனுப்புவதை வாசுதேவன் வாடிக்கையாக கொண்டிருந்தார். எப்படியாவது, கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்ற லட்சியத்தில், வாசுதேவனின் செயலை அவர் பொருட்படுத்தவில்லை. பின்னர் கல்லூரி படிப்பை முடித்து அந்த பெண் திருச்சிக்கு வந்துவிட்டார்.

போலி திருமண சான்று

மேலும் வாசுதேவனின் செல்போன் எண்ணில் இருந்து அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் வராமல் இருக்க, அவருடைய செல்போன் எண்ணை அந்த பெண் ‘பிளாக்’ செய்தார். ஆனாலும், வாசுதேவன் அந்த பெண்ணை விடாமல் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து காதல் கவிதை, காதல் வசனம் போன்ற குறுந்தகவல்களை தொடர்ந்து அனுப்பிய வண்ணம் இருந்தார்.

அதை அந்த பெண் கண்டுகொள்ளவே இல்லை. இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும், தனக்கும் பதிவு திருமணம் நடந்தது போலவும், அதில் இருவருடைய புகைப்படம் இருப்பது போலவும், போலியான திருமண சான்றை தயார் செய்த வாசுதேவன், அதை அந்த பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பினார். அதை பார்த்து அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

வழக்குப்பதிவு

உடனே தனது பெற்றோருடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று இதுபற்றி அந்த இளம்பெண் புகார் அளித்தார். அந்த புகார் மீது உரிய விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க திருச்சி கண்டோண்மென்ட் அனைத்து மகளிர் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், வாசுதேவன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354(1)(பாலியல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டது), பிரிவு 417 (ஆசைவார்த்தை கூறி ஏமாற்ற முயற்சித்தது) மற்றும் பிரிவு 469 (போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தது) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி வழக்குப்பதிவு செய்து வாசுதேவனை தேடிவருகிறார்கள்.

Next Story