பெருமாநல்லூர் அருகே நடுரோட்டில் மது குடித்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல்: பனியன் நிறுவன அதிபர் உள்பட 3 பேர் கைது


பெருமாநல்லூர் அருகே நடுரோட்டில் மது குடித்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரர் மீது தாக்குதல்: பனியன் நிறுவன அதிபர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 March 2020 9:15 PM GMT (Updated: 15 March 2020 7:29 PM GMT)

பெருமாநல்லூர் அருகே நடுரோட்டில் மது குடித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த பனியன் நிறுவன அதிபர் உள்பட 3 பேர் போலீஸ்காரரை தாக்கினர். இது தொடர்பாக அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெருமாநல்லூர், 

திருப்பூர் கோவில்வழி பகுதியை சேர்ந்த முருகேசனின் மகன் சிவகுருநாதன்(வயது 28). பனியன் நிறுவன அதிபர். இவருடைய நண்பர்கள் உடுமலையை சேர்ந்த செபாஸ்டின் மகன் ஹர்சன்(39), திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் யுவராஜ்(36) ஆவார்கள். பனியன் நிறுவன அதிபரான சிவகுருநாதன், தனது நண்பர் யுவராஜூக்கு பள்ளிக்கூட ஆடைகள் தைப்பதற்காக மொத்த ஆர்டர் கொடுத்து இருந்தார்.

இதையடுத்து யுவராஜ், நண்பர்கள் சிவகுருநாதனுக்கும், ஹர்சனுக்கும் மதுவிருந்து வைக்க விரும்பினார். இதை அவர்களுக்கு தெரிவித்தார். இதையடுத்து சிவகுருநாதன், ஹர்சனுடன் சேர்ந்து ஒரு காரிலும், யுவராஜ் மற்றொரு காரிலும் திருப்பூர் அருகே பெருமாநல்லூர் நால்ரோடு பகுதிக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு வந்தனர். அங்கு ஈரோடு செல்லும் ஒருவழிப்பாதையில் 2 கார்களையும் நிறுத்தினர்.

அதன்பிறகு அவர்கள் 3 பேரும் தாங்கள் வாங்கி வந்த மதுபாட்டில்கள், உணவு பதார்த்தங்களுடன் கீழே இறங்கினார்கள். பின்னர் தாங்கள் வந்த ஒரு காரின் முன்பக்கத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர். அந்த காரில் அமர்ந்து கொண்டே பாட்டிலில் மதுவை ஊற்றி குடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவரும், பெருமாநல்லூர் போலீஸ்காரருமான ஈஸ்வரமூர்த்தி(29), பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த சதீ‌‌ஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இரவு ரோந்து சுற்றி வந்தார். ஈரோடு செல்லும் ஒரு வழிப்பாதையில் 2 கார்கள் நிற்பதையும், அந்த காரின் முன்பக்கத்தில் சிலர் மதுபாட்டிலுடன் அமர்ந்து இருப்பதையும் பார்த்து ஈஸ்வரமூர்த்தி, சதீசுடன் அங்கு சென்றார்.

போலீஸ்காரர் வந்தது தெரிந்தும் அவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் மது குடித்து கொண்டு இருந்தனர். இதை பார்த்த ஈஸ்வரமூர்த்தி, நடுரோட்டில் மது குடிக்கிறீர்களே? என்று கேட்டு இருக்கிறார். உடனே அவர்கள் 3 பேரும் நாங்கள் எங்கு வேண்டும் என்றாலும் மது குடிப்போம். எங்களை கேட்பதற்கு நீ யார்? என்று குடிபோதையில் பேசி உள்ளனர்.

உடனே போலீஸ்காரர், அங்கு இருந்து செல்லுமாறு கூறி இருக்கிறார். இதை கேட்காமல் அவர்கள் தொடர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர். உடனே ஈஸ்வரமூர்த்தி தான் வைத்திருந்த செல்போனில் அவர்கள் 3 பேரையும் வீடியோ எடுக்க முயற்சித்தார். இதை பார்த்த அவர்கள் போலீஸ்காரரிடம் இருந்து அந்த செல்போனை பிடுங்கினர். இதை தடுக்க முயன்ற போலீஸ்காரர் ஈஸ்வரமூர்த்தியை அவர்கள் சரமாரியாக தாக்கினர். பின்னர் போலீஸ்காரரிடம் இருந்து பறித்த செல்போனை சாலையில் வீசி எறிந்தனர். இதை தட்டி கேட்க வந்த சதீஷையும் அவர்கள் மிரட்டினார்கள்.

இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் இது குறித்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போலீஸ்காரரை தாக்கிய சிவகுருநாதன், ஹர்சன், யுவராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். 

கைதான அவர்கள் 3 பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். கைதான ஹர்சன் தேனி மாவட்டம் தாமரைக்குளம் பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெருமாநல்லூர் அருகே நடுரோட்டில் மது குடித்ததை தட்டி கேட்ட போலீஸ்காரரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story