குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: பரங்கிப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரங்கிப்பேட்டை,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சென்னை வண்ணாரப்பேட்டை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததாக தெரிகிறது. இதை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை கைவிடக் கோரியும், முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும் பரங்கிப்பேட்டை வாத்தியார் பள்ளி தெருவில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிடக்கோரி கோஷம் எழுப்பினர். போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story