பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க மறுத்ததால் மாமனாரின் கை விரலை கடித்து துப்பிய தச்சுத்தொழிலாளி கைது


பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க மறுத்ததால் மாமனாரின் கை விரலை கடித்து துப்பிய தச்சுத்தொழிலாளி கைது
x
தினத்தந்தி 16 March 2020 4:30 AM IST (Updated: 16 March 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க மறுத்ததால் மாமனாரின் கை விரலை கடித்து துப்பிய தச்சுத்தொழிலாளி கைது் செய்யப்பட்டார்.

கல்பாக்கம்,

செய்யூர் தாலுகா அச்சரப்பாக்கம் அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னன் (வயது 36). இவரது மனைவி கற்பகம் (33). 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பொன்னன் அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

குடும்பத்தையும் சரியாக கவனிக்காமல் தகராறு செய்து வந்ததால் வெறுப்படைந்த கற்பகம் கல்பாக்கம் அடுத்த தென்பட்டினம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு பொன்னன் தென்பட்டினத்திற்கு வந்து மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார்.

கற்பகம் வர மறுத்தார். அப்போது கற்பகத்தின் தந்தை முருகேசன் குறுக்கிட்டு நீ ஒழுங்காக குடும்பம் நடத்தாததால் தானே அவள் மறுக்கிறாள் என கூறி சேர்த்து வைக்க மறுத்து விட்டார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த பொன்னன் திடீரென மாமனாரின் இடது கை ஆள்காட்டி விரலை கடித்து துப்பி விட்டார்.

வலி தாங்க முடியாமல் துடித்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னனை கைது செய்தனர்.

Next Story