வாலாஜாபாத் அருகே மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


வாலாஜாபாத் அருகே மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 March 2020 11:00 PM GMT (Updated: 15 March 2020 8:31 PM GMT)

வாலாஜாபாத் அருகே மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா தென்னேரி கிராமத்தில் இருந்து சின்னி வாக்கம், மருதம் வழியாக காஞ்சீபுரம் மற்றும் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லவும், காஞ்சீபுரத்தில் இருந்து தென்னேரி, சுங்குவார்சத்திரம் வழியாக சென்னை செல்லும் வகையில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாலை உள்ளது.

வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட இந்த சாலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான தென்னேரி ஏரி மழைக்காலங்களில் நிரம்பினால் உபரி நீர் வெளியேறும் 2 கலங்கல் உள்ளது.

மழைக்காலங்களில் கலங்கலில் இருந்து தென்னேரி ஏரியின் உபரிநீர் வெளியே செல்லும்பொழுது ஒன்றிய சாலை துண்டாகிவிடும்.

இதன் காரணமாக தென்னேரி விளாகம், அகரம் கோவளவேடு, அயிமிஞ்சேரி, ஓடந்தாங்கல், சிறுபாகல், சின்னி வாக்கம், மருதம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சீபுரத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

மேலும் மழைக்காலங்களில் சாலைகள் துண்டிக்கப்படும் போது ஒவ்வொரு முறையும் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டதால் பொதுமக்களும், பள்ளி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லக்கூடியவர்கள், என பலரும் கஷ்டப்பட்டனர்.

இதன் காரணமாக மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் தென்னேரி - மருதம் சாலையை சீரமைக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் ரூ.3 கோடியே 62 லட்சத்து 54 ஆயிரம் செலவில் சாலை அமைப்பதற்காகவும், தலா ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் தென்னேரி ஏரி கலங்கல் செல்லும் 2 சாலைப் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பணிகள் தொடங்கப்பட்டு சாலை மட்டுமே அமைக்கப்பட்ட நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி முழுமை பெறாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மீண்டும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் மேம்பாலம் கட்டும் பணியில் முறையாக திட்டமிடாததால் தென்னேரி ஊராட்சிக்குட்பட்ட மல்லிகாபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கும், தென்னேரி சுடுகாடு பகுதிக்கும் செல்லும் சாலை இல்லாமல் அவதிப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் உடனடியாக தமிழக அரசும் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு தென்னேரி மருதம் சாலையில் நடைபெற்றுவரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும், மேம்பாலம் கட்டுமானத்தால் தென்னேரி சுடுகாட்டுக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்படுவதை தடுத்து மேம்பாலத்தின் கீழ் சுரங்க பாதையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story