வங்கி கொள்ளையில் கைதான ஆசாமி கோவை சிறையில் அடைப்பு
பொங்கலூர் அருகே வங்கி கொள்ளையில் கைதான ஆசாமி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த கள்ளிப்பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கிக்கு கடந்த மாதம் 23-ந் தேதி இரவு ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வங்கியின் லாக்கர்கள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து அதில் இருந்த 1000 பவுனுக்கு அதிகமான நகை மற்றும் ரூ.19 லட்சத்து 83 ஆயிரம் பணத்தையும் கொள்ளை அடித்துச்சென்றனர்.இந்த கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளையர்கள் தங்களை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க வங்கியின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்தும், காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துச்சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 11 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் வங்கி கொள்ளை வழக்கில் தொடர்புடைய அரியானா மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் அனில்குமாரின் நண்பரான அரியானாவை சேர்ந்த இஷார்கானை (34) ராஜஸ்தானிலும், பெங்களூருவை சேர்ந்த ராமன்ஜீ அப்பா(35) மற்றும் ராமகிருஷ்ண ஆச்சார்யா(32) ஆகியோரை பெங்களூருவிலும் போலீசார் கைது செய்தனர். இதில் அனில்குமார், ராமன்ஜீ அப்பா, ராமகிருஷ்ண ஆச்சாரியா ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர்.
ஆனால் இஷார்கான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டதால் அங்கிருந்து தனிப்படை போலீசார் அவரை ரெயில் மூலம் திருப்பூருக்கு நேற்று அழைத்து வந்தனர். பின்னர் திருப்பூரில் இருந்து பல்லடம் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இஷார்கானிடம் இருந்து 500 கிராம் தங்கமும், 600 கிராம் வெள்ளிக்கொலுசும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story