தெள்ளார் ஊராட்சியில், இருளர் குடும்பங்களுக்கு 100 வீடுகள் கட்டும் பணி - கலெக்டர் ஆய்வு


தெள்ளார் ஊராட்சியில், இருளர் குடும்பங்களுக்கு 100 வீடுகள் கட்டும் பணி - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 March 2020 10:15 PM GMT (Updated: 16 March 2020 1:01 AM GMT)

தெள்ளார் ஊராட்சியில் இருளர் குடும்பங்களுக்கு 100 வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

வந்தவாசி,

வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மீசநல்லூர் கிராமத்தின் அருகே தெள்ளார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.6 கோடியே 61 லட்சம் மதிப்பில் 2-ம் கட்டமாக இருளர் குடும்பங்களுக்கு 100 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த குடியிருப்பு பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கால்வாய் வசதி, மின்வசதி, அங்கன்வாடி மையம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம், நவீன பூங்கா, மாட்டு கொட்டகை, சிமெண்டு சாலை, தார்சாலை மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 10 ஏக்கர் பரப்பளவில் செங்கல்சூளை, அடுப்புக்கரி சூளை உள்பட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் அங்குள்ள பழங்குடியினருக்கு கலெக்டர் மதிய உணவு வழங்கினார். இதையடுத்து அவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலன்) இளங்கோவன், செய்யாறு உதவி கலெக்டர் கே.விமலா, வந்தவாசி தாசில்தார் வாசுகி, சமூக பாதுகாப்பு தாசில்தார் நரேந்திரன், தெள்ளார் ஒன்றிய ஆணையாளர் குப்புசாமி, ஒன்றிய பொறியாளர்கள் மணிகண்டன், செல்வராஜ், தெள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.ஆனந்த், துணைத்தலைவர் அருண், ஊராட்சி செயலர் முருவம்மாள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story