திருப்பத்தூர் எல்லை பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு; கலெக்டர் தகவல்


திருப்பத்தூர் எல்லை பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 March 2020 10:30 PM GMT (Updated: 16 March 2020 1:00 PM GMT)

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க திருப்பத்தூர் எல்லை பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சிவன்அருள் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருப்பத்தூர்,

கொரோனா வைரஸ் காய்ச்சல் இந்தியாவில் பரவி வருகிறது. இதனை தமிழகத்தில் பரவாமல் தடுக்க தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு இல்லை.

இந்த நோய் அண்டை மாநிலத்தில் இருந்து வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் எல்லை பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் இந்த வைரஸ் காய்ச்சலுக்காக தனிப்பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நோய் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

 திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளிகளில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை வருகிற 31–ந் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையோர பகுதிகளான நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ள அனைத்து தியேட்டர்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்ற மாநிலங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் கொரோனா வைரஸ் நோய் முற்றிலுமாக நமது மாவட்டத்தில் வராமல் தடுக்க முடியும். கொரோனா வைரஸ் நோய் பற்றி சமூகவலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story